சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் முதுகு வலி காரணமாக முதலமைச்சர் நேற்று இரவு 8 மணி அளவில் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.
அவருடன் அவரது மனைவி, மருமகன், மகள் ஆகியோரும் வந்திருந்தனர். சுமார்
2 மணி நேர பரிசோதனைக்கு பின்பு முதலமைச்சர் காரில் வீடு திரும்பினார். மேலும்
வழக்கமான பரிசோதனைக்காகவும், முதுகு வலி ஏற்பட்டதால் அதற்கான ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக முதலமைச்சர் லேசான உடல் சோர்வுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் ஒரு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின்பு முதலமைச்சர் தனது காரில் வீடு திரும்பினார்.
முதலமைச்சர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்ததையடுத்து மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் முன்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர் சிகிச்சை முடிந்து வெளியே செல்லும் வரை வெளி ஆட்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







