சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்திருந்தது.
இதனை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து, கார் மூலம் சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட சஞ்சிப் பானர்ஜி, கொரோனா காலத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன்கள் வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







