உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, செஸ் வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட்
10ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வரும் வீரர்கள், வீராங்கனைகள்
தங்க சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட
ஹோட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் வீரர்கள், வீராங்கனைகள் வந்தால் எந்தவித தடையுமின்றி செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருந்து 4 வீரர்களும், ஜாம்பியா, ஹாங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து 2 வீரர்களும் சென்னை வந்தனர். இவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள செஸ் ஒலிம்பியாட் சின்னம் அருகே வீரர்கள் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
பின்னர், அவர்களை சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றனர். இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வரை வீரர்கள் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.
-ம.பவித்ரா








