விமானத்தில் பறந்து கொண்டே செஸ் விளையாட்டு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அரசு பள்ளி மாணவா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டவா்களுக்கு நாளை இலவச விமான பயணம் செய்து கொண்டே, செஸ் விளையாடுவாா்கள். இந்த விமான பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் நாளை…

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அரசு பள்ளி மாணவா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டவா்களுக்கு நாளை இலவச விமான பயணம் செய்து கொண்டே, செஸ் விளையாடுவாா்கள். இந்த விமான பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் நாளை பிற்பகலில் தொடங்கி வைக்கிறாா்.

44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நாளை மறுதினம் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஒலிம்பியாட் போட்டியை நாளை மறுதினம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் இந்த ஒலிமபியாட் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தி, ஊக்கப்படுத்தும் விதத்தில், சென்னை விமான நிலையத்தில், சென்னையில் இருந்து பெங்களூர் வரை நாளை பிற்பகலில் ஒரு சிறப்பு விமான சேவை நடத்தப்படுகிறது.

இந்த விமானத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக பயணம் செய்ய இருக்கின்றனர். இவர்கள் இந்த சிறப்பு விமானத்தில் பறந்து கொண்டே, செஸ் விளையாடவும் உள்ளனா்.

இந்த விமான பயணத்தை நாளை பிற்பகல் சென்னை விமான நிலையத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது மிகவும் ஒரு சிறந்த புதிய அனுபவமாக இருக்கும். இதுவரையில் விமான பயணமே மேற்கொள்ளாத ஏழை, எளிய மாணவ மாணவிகள் பலர் இந்த விமான பயணத்தில் இடம்பெற இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் இதைப் போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை. இந்நிலையில் தற்போது சரித்திர புகழ் வாய்ந்த 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருப்பதையொட்டி, தமிழக மாணவர்களுக்கு இந்த ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.