நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரி விதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயலாகும் என்று அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதி மணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 பேர் மக்களவையில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூடியது. காலை 11 மணிக்கு அவை கூடியதும் அலுவல் தொடங்கியது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், சாந்தனு சென், டோலா சென் ஆகியோரும் ஒரு வாரத்திற்கு மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுஷ்மிதா தேவ், மெளசம் நூர், சாந்தா சேத்ரி, டோலோ சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், நடிமுல் ஹேக் ஆகியோரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் லிங்கையா யாதவ், ரவிச்சந்திரா வட்டிராஜு, தாமோதர் ராவ் திவாகொண்டா ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, திமுகவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் எம்.பி.யும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.








