நிதிமுறைகேடு வழக்கில் ஆஜராக ஃபரூக் அப்துல்லாவுக்கு சம்மன்

நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷனின் வங்கிக் கணக்கில் இருந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் உள்பட…

நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷனின் வங்கிக் கணக்கில் இருந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலரது வங்கிக் கணக்குகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முறைகேடாக பணம் அனுப்பப்பட்டதாக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் 6 பேர் மீது குற்றம் சாட்டிய சிபிஐ, இந்த முறைகேடு காரணமாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு ரூ.43.69 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிட்டது.

இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ரூ.51.90 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், ரூ.21.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷனின் அப்போதைய பொருளாளர் அஷான் அகமது மிர்சாவை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜூன் 4ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள நிதி மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத்துறை, முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, அஷான் அகமது மிர்சா, மீர் மன்சூர் கஜன்பர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறையின் துணை குற்றப்பத்திரிகையில் ஃபரூக் அப்துல்லாவின் பெயர் இடம் பெற்றதை அடுத்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அமலாக்கத்துறை, வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.