கொடுங்கையூர் பகுதியில் சைக்கிளில் வந்து பால் பாக்கெட்டுகளை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.வி நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக பால் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதிகாலை கடையின் முன்பு வைத்திருந்த 72 பால் பாக்கெட்டுகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் சைக்கிளில் வந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது நூருல்லா, கொளத்தூரைச் சேர்ந்த முஷ்ரத் ஷெரீப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







