சென்னை : திருமணம் தாண்டிய உறவு – மனைவியின் நகைகளை தாரைவார்த்த கணவன்

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணுக்காக சொந்த வீட்டில் 550 பவுன் நகைகளை எடுத்து சென்ற மகனையும், மாடல் அழகியையும் போலீசார் கைது செய்தனர்.   பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்செல்வி, இவருக்கு, 41 வயதில்…

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணுக்காக சொந்த வீட்டில் 550 பவுன் நகைகளை எடுத்து சென்ற மகனையும், மாடல் அழகியையும் போலீசார் கைது செய்தனர்.

 

பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்செல்வி, இவருக்கு, 41 வயதில் சேகர், 37 வயதில் ராஜேஷ், என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில், கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். பூந்தமல்லியில் இனிப்பு கடை நடத்தி வருவதோடு பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தள்ளனர்.

 

இந்நிலையில் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சேகரின் தாய் தமிழ்செல்வி புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகன் சேகர், வீட்டில் இருந்த 550 பவுன் நகைகளை திருடி, திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண்ணிடம் கொடுத்து விட்டதாகவும், நகைகளை மீட்டு கொடுப்பதோடு, அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில், சேகர் மற்றும் அவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த, சுவாதி என்ற பெண்ணையும் பூந்தமல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகரின் மனைவிக்கு இருதய பிரச்சனை இருப்பதால், கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்ய உறவில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களிடம் உறவுக்கு செல்ல தரகர் ஒருவரை அனுகியுள்ளார் சேகர். அப்படி, சேகருக்கு, அறிமுகமானவர்தான், 22 வயதான சுவாதி. இவர் மாடலிங் செய்து வருவதோடு, பாலியல் தொழிலும் ஈடுபட்டு வந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

சேகர் விரும்பும்போதெல்லாம், சுவாதியை போரூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும், கட்டணமாக ரூ.15 ஆயிரம் கொடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் சுவாதியை காதலிக்க தொடங்கிய சேகர், நிரந்தரமாக தன்னுடன் வைத்து கொளள விரும்பியிருக்கிறார். சுவாதியும் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து, சேகருடன், கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். இருவரும், அடிக்கடி கோவா, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து சென்று சுவாதியிடம் கொடுத்துள்ளார். பின்னர் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்ததும், சுவாதியின் வீட்டிற்கு சென்று 200 பவுன் நகைகளை மீட்டு வந்துள்ளனர்.

 

இதனிடையே, சுவாதியும், சேகரும் தாய்லாந்து செல்வதற்காக பாஸ்போர்ட், சுற்றுலா விசா ஆகியவற்றை எடுத்துள்ளனர். அதற்குள் தமிழ் செல்வி அளித்த புகாரில் இருவரும் போலீசில் சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேகர் இதுவரை சுவாதிக்கு, 550 பவுன் நகைகள், ரூ.30 லட்சம் பணம், ரூ.10 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள், விலையுர்ந்த கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் சுவாதியிடம் இருக்கும், பணம், நகைகளை திருப்பி கொடுக்கும்படி, சேகரின் உறவினர்கள் கேட்ட போது, அப்படி எதுவும் தன்னிடம் சேகர் கொடுக்கவில்லை என கூறியிருக்கிறார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த சேகரின் தாய் தமிழ் செல்வி, வழக்கறிஞர்களை வைத்து சுவாதியை மிரட்டியிதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்செல்வி மற்றும் அவரது தம்பி மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். சேகர் தன்னிடம் கொடுத்த நகைகளை எல்லாம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி எடுத்து சென்றதாகவும் சுவாதி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.