அதிமுக அலுவலக வழக்கு; விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவி ஒப்படைப்பு விவகாரம் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  உச்சநீதீமன்றம் தெரிவித்துள்ளது.  ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு…

அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவி ஒப்படைப்பு விவகாரம் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  உச்சநீதீமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து வன்முறை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார், மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தும் கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யதார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் முறையிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.