சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.
சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதி போட்டி வரை வந்துள்ளனர். இந்நிலையில், இறுதிப் போட்டிகள் இன்று மாலை நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பின்னர் வெற்றி பெற உள்ள வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்க உள்ளார். இறுதி போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட் மற்றும் செக் குடியரசு வீராங்கனையான லிண்டா ஃப்ரூவிர்டோவா மோத உள்ளனர்.
இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியினர், ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஜ் ஜோடியுடன் களம் காண்கின்றனர். சாம்பியன் பட்டம் வெல்லும் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கோப்பைகளும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
வார இறுதி நாட்கள் என்பதால் இன்று ரசிகர்களின் வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி போட்டிகளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இறுதிப் போட்டியில் முதல் அமைச்சருடன், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், துறை சார்ந்த அதிகாரிகள், தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.







