அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால், இதற்கு டவ்-தே என பெயரிடப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளின் பல்வேறு இடங்களில், மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை, சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் 65 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
டவ் – தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முகாமிட்டுள்ளன.
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரளாவுக்கு 9 குழுக்கள், தமிழகத்திற்கு 4 குழுக்கள் என 13 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2 குழுக்கள் மதுரையிலும், 2 குழுக்கள் கோவையிலும் முகாமிட்டுள்ளன. புயலால் பாதிக்கப்படும் மக்களை மீட்க ஒரு குழுவுக்கு தலா 25 வீரர்கள் என தயார் நிலையில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வீரர்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.