பள்ளிக்கட்டண பாக்கி; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக பள்ளி கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்…

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக பள்ளி கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களை பள்ளி கட்டண பாக்கியை செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தனியார் பள்ளிகள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும், இணையதள வசதியையும் கொரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மாதந்தோறும் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.