சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட மாருதி நகர், முதல் பிரதான சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையினை முழுமையாக அகற்றி விட்டு, மீண்டும் புதிய சாலையை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர் தலைமையில், பணிகள் பிரிவு இணை ஆணையாளர், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரவு நேரங்களில் சாலைப் பணிகள் நடந்து வரும் இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 29-ம் தேதி வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென ஆய்வு குழுவினர் நேரில் வந்து பணிகளை பார்வையிட்டு தரப்பரிசோதனைகளை மேற்கொண்டார். ஆய்வில் சாலையில் கொட்டப்பட்ட தார்க்கலவையைின் வெப்பநிலையை சரிபார்த்த பொழுது 140 டிகிரி செல்சியஸ் முதல் 160 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டிய அளவு 115 டிகிரி செல்சியஸ் அளவில் மட்டுமே இருந்தது அறியப்பட்டது.
அதன் பின் லாரியில் கொட்டப்படாமல் இருந்த தார்க்கலவைகளை ஆய்வு செய்த போது 105 டிகிரி செல்சியஸ், 110 டிகிரி செல்சியஸ், 94 டிகிரி செல்சியஸ் என தார்க்கலவையில் வேறுபாடு காணப்பட்டதால் இந்தத் தார்க்கலவை சாலை அமைப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் தார்சாலை அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
—அனகா காளமேகன்







