பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). மேலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார் என கூறப்படுகிறது. இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்த ரயில்பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை காதலனே ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








