அண்ணா சாலை கட்டட விபத்தில் இளம்பெண் பத்மப் ப்ரியா உயிரிழந்தது தொடர்பாக மேலும் ஒருவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று பழைய கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி ஊழியர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பத்மபிரியாவை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இடிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்த ஜேசிபியின் உரிமையாளர் ஞானசேகரன் மற்றும் ஜேசிபியை இயக்கிய டிரைவர் பாலாஜி என இருவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இங்கு வழக்கில் கட்டிட காண்ட்ராக்டர் ஜாகிர் உசேன் என்பவரையும் ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ வான அய்யப்பன் நியூஸ்7 தமிழ்-க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்ததாவது..
”சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை எந்த பாதுகாப்பும் இன்றி இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா – விற்கு உரிய இழப்பீடை இது வரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களும் கைது செய்யப்படவில்லை. தமிழக அரசு விரைவில் உரிய இழப்பீடாக பத்ம ப்ரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.
மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் இந்த விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி மீண்டும் இது போன்ற விலைமதிப்பில்ல மனித உயிர்கள் பலியாவதை தமிழக அரசு தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஒபிஎஸ் சார்பிலும், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையிலும், எனது சார்பிலும் பத்ம ப்ரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அய்யப்பன் எம்எல்ஏ தெரிவித்தார்.
– யாழன்