வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3; தமிழிசை சௌந்தரராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்திருந்த நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர்.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 4-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்ததோடு, விஞ்ஞானிகள் இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததையடுத்து தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சந்திராயன்-3 விண்கலம் உருவாக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள், பணியாளர்கள் மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ தரைப்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இலக்கு வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.