”தல ஸ்டைல சொல்லனும்னா இட்ஸ் ஜஸ்ட் ஏ பிகினிங்” என்றொரு வசனம் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை படத்தில் வரும். அது போலவே சிவகார்த்திகேயனின் தமிழ் சினிமா அத்தியாயத்தில் மற்றுமொரு சிறப்பான தொடக்கமாக மாவீரன் படம் அமைந்திருக்கிறது .
தியேட்டர் வியாபாரம் 110 கோடிக்கும் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட வியாபாரங்கள் 200 கோடியை நெருங்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. சிவாவின் வசனத்திலயே சொல்ல வேண்டும் என்றால், வேலைக்காரன் படத்தில் ”உலகின் தலை சிறந்த சொல் – செயல்” என்று வசனத்தை இது நினைவுப் படுத்துகிறது.
தொலைக்காட்சியில் காமடி ஷோவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் 2012 ம் ஆண்டு மெரினா படம் வந்த போது வழக்கமான தமிழ் ஹீரோவாக பார்க்கப்பட்டார். 2013 ம் ஆண்டு எதிர்நீச்சல் சிவார்த்தியகேயனின் சினிமா கேரியரில் சிறந்த படமாக அமைந்தது .அங்கிருந்து டாப் ஹியர் பிடித்து கடந்த 10 ஆண்டுகளில் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடிப்பு, காமடி, டான்ஸ், உடல் மொழி என சிவாவின் திறமைகளை கண்டு அவருக்கு தானாய் சேர்ந்தது இளைஞர்களின் ரசிகர்கள் கூட்டம்.
மான் கராத்தே மற்றும் ரெமோ அவரது கேரியரில் சிறந்த படங்களா என்ற விவாதத்தை எல்லாம் தாண்டி குழந்தைகளின் மனதில் சிவகார்த்திகேயனை கொண்டு போய் சேர்த்தது. ரகளையான, கிராமத்து துடுப்பான ஹீரோவாக வலம் வந்த சிவா, ”எவன் டார்கெட்டுக்கோ நீ ஏண்டா ஓடுற..” போன்று அழுத்தமான வசனங்களையும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் தனது டார்கெட்டில் வெற்றிகொடிகட்டினார்.
”நமக்கு தேவையில்லாத ஆடம்பரத்த விற்பதற்கு ஆள் இருக்கு. நமக்கு தேவையான அத்தியாவசத்த விற்க ஒருத்தனும் இல்ல”. இப்படி நெற்றி பொட்டில் அடித்தாற் போல உலகின் வியாபார நுட்பங்களை அதுவும் சினமாவில் லைம்லைட்டில் இருக்கும் போது வசனங்களாக ஹீரோக்கள் பேசுவது அவ்வளவு எளிதல்ல. முன்னணி ஹீரோக்களே விளம்பர வாய்ப்புகளுக்காக இத்தகைய கதைகளை எடுக்க தயங்குவார்கள்.
ஆனால் சிவா, குழந்தைகளின் சாப்பிடும் பாக்கெட் உணவுகள் ஏற்படுத்தும் பேராபத்தை சிறப்பாக வேலைக்காரனில் சொன்னதோடு தனக்கு ரசிகர்களாக இருக்கும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக காண்பித்ததோடு, தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்த அப்பாவாகவும் பல தருணங்களில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில் பெண்களை பின் தொடர்வது தான் காதல், டாக்டரில் வரும் நைட்டி காட்சி போன்று பெண்கள் தொடர்பான காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனத்தோடு சிவா நடித்தால் போட்டியே இல்லாமல் தனக்கான ஒரு இடத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு பயணிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை தக்க வைக்கவும் சிவாவால் முடியும் என்பது சினிமா விமர்சகர்களின் பார்வை.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி , ரஜினி -கமல், விஜய் – அஜித் இப்படி ஹீரோக்களுக்குள் போட்டி உண்டு. அது ரசிகர்களுக்கு இடையேயான போட்டியாக மாறுவது வரலாறு. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அப்படி நேரெதிர் போட்டி ஹீரோ என்று ஒருவரும் இல்லை. விஜய் அரசியல் பக்கம் வந்தால் சிவாவுக்கு, அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்ற மாஸ் ஹீரோ இமேஜான விஜய் இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு அமையும். அப்போதும் அவருக்கு எதிரே போட்டிப் போடப்போவது யார் என்ற கேள்வி உள்ளது ? இது தான் தமிழ்சினிமாவில் சிவாவின் பலம், பலவீனம் என்று கூட பார்க்கலாம்.
அதனால் தான் மாவீரன் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவீரனின் வியாபார கணக்கில் மாஸ் ஹீரோ பட்டியலில் வந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நம்பர் கணக்குகளை எல்லாம் யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ விஜய் ரசிகர்கள் அறிந்து அவர்கள் சில கணக்குகளை போட ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு சான்று தான், சிவகார்த்திக்கேயனை சீண்டும் வகையில், ‘என்னடா படம் இது ? ‘ என சோசியல் மீடியாக்களில் படம் ரிலீசாவதற்கு முன்னே கமண்ட் போட்டு கம்பு சுத்துகிறார்கள் .
இது ஒரு புறம் என்றால் , நடிகர் விஜயின் மனைவி சங்கீதா முதல் நாள் முதல் காட்சி மாவீரன் பார்க்க வந்தது வேறு பேசு பொருளாகி இருக்கிறது. மாவீரன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பெற்று வருவதும் SK தரப்பிற்கு உற்சாகத்தை தந்திருக்கிறது.
ரஜினி பட டைட்டில், 80 களில் ரஜினியை நினைவுப்படுத்தும் தோற்றம் என மாவீரன் ரஜினி ரசிகர்களாலும் கொண்டாடப்படுவதால் ரஜினியின் பரம ரசிகனான சிவாவிற்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. ”நான் யானையில்ல குதிரை” என்ற குரு ரஜினி பாணியில் மாவீரனில் சொல்லி அடித்திருக்கும் சிவாகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக போட்டியின்றி வலம் வருவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.




