சந்திரயான் 3 வெற்றி – இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

சந்திரயான் 3 வெற்றி – இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.! நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு…

சந்திரயான் 3 வெற்றி – இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. இதனிடையே தென்ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்தவாறு சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதை காண நேரலையில் இணைந்தார். அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு பக்கவாட்டில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரில் பொறுத்தப்பட்டுள்ள Horizontal Velocity Camera எடு்த்த 4 படங்களை இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

நேற்று இரவு மேலும் சில புகைப்படங்களை விக்ரம் லேண்டர் அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் பொறுத்தப்பட்டுள்ள Landing Imager camera புதிய படத்தை அனுப்பியது. அந்த படத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளமும், லேண்டரில் உள்ள கால்களின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளன. தற்போது சந்திரயான் 3 நிலவின் சம தளத்தில் நிலையான இடத்தை தேர்வு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் இஸ்ரோ மையத்திற்கு நேரடியாக சென்று சந்திரயான் 3 பங்காற்றிய அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது..

விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய உங்கள் சாதனை பாராட்டுக்குரியது. நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். சந்திரயான் 3 திட்டத்திற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. இஸ்ரோவின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்..” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.