ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலிலிருந்தே விலகுவேன் என ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குர்னூல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்கு திரும்பமாட்டேன் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாம் சூளுரை எடுத்தை சுட்டிக்காட்டினார். அந்த சவாலில் தற்போதும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தான் அரசியலில் தொடர வேண்டும் என விரும்புகிறீர்களா என பொதுமக்களை பார்த்து கேட்ட சந்திரபாபு நாயுடு, அப்படி தொடர வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் அதுதான் தமது கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
தமக்கு வயதாகிவிட்டதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சிப்பதற்கு பதிலடி கொடுத்து பேசிய சந்திரபாபு நாயுடு, அரசியலில் தொடர்ந்து பயணிக்கும் அளவிற்கு தாம் உடல் ரீதியாக தகுதியானவராகவே இருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடிக்கும் தமக்கும் ஒரே வயதுதான் ஆகிறது என சுட்டிக்காட்டிய சந்திரபாபு நாயுடு, 79 வயதில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருவதையும் மேற்கோள்காட்டினார்.







