தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 11 : 30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகாணமலையில் இருந்து கிழக்கே சுமார்180 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே சுமார 440 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக, இன்று தமிழக கடலார மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் , காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், கடல் சீற்றம் காரணமாக சீர்காழி தாலுக்கா பகுதியை சேர்ந்த 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதால் இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மீனவர்கள் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம், குளச்சல், தேங்கப்பட்டினம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து விசை படகில் மீன் பிடிக்க செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இரண்டாவது நாளாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மேலும் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று மயமான நான்கு மீனவர்கள் கரை திரும்பி கொண்டு இருப்பதாக உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.