தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும்.
இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்ககூடும்.
19ம் தேதி முதல் 21ம் தேதி வரை கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
17மற்றும் 18ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.11.2022: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.11.2022 முதல் 21.11.2022 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.









