தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 8 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் 9-ம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு imdchennai.gov.in என்ற இணையதளத்தை காணவும் என குறிப்பிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்