முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அவதூறாக பேசியதாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, எல்.முருகன் மத்திய அமைச்சரானதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில், நேற்று எல்.முருகன் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் ஆஜராகாததால், வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராக விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.








