“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இது…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,  மே 21, 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன்,  சந்திரா சாமி,  சுப்பிரமணியன் சுவாமி  ஆகியோர் மீது சந்தேகத்தை எழுப்பி, இந்த படுகொலையில் அயல்நாட்டு சதி இருக்க வாய்ப்புள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் அன்றைய மத்திய பாஜக அரசு பல்துறை கண்காணிப்பு முகமையை (MDMA) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் MDMA இதுவரையில் பாஜக முன்னாள் எம்.பி, சுப்பிரமணியன் சுவாமியை விசாரிக்கவில்லை.  இதனிடையே மத்திய அரசு 2022 மே மாதத்தில் இந்த பல்துறை கண்காணிப்பு முகமையை கலைத்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட தமிழர்களை மட்டும் முறையான விசாரணைக்கு உட்படுத்தி தண்டித்து விட்டு, படுகொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று கருதப்படும் இந்துத்துவ சக்திகளை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது.

மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும், ராஜீவ் காந்தி படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தொடர்பை சட்டப்படி முறையான விசாரணைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தி நான் விரைவில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளேன்”.

இவ்வாறு சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.