முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசின் வரிபகிர்வு நியாயமானதாக இல்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் வரி பகிர்வு நியாயமானதாக இல்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தொடரில் திமுக எம்பி கனிமொழி மத்திய அரசின் வரி உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பால், தயிர், லஸ்சி போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வில் திமுக அரசு 5 சதவீதத்திற்கு அதிகமாக வரி போட்டுள்ளதாக குற்றசாட்டுகளை முன் வைத்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவைகள் வரி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் ஆகியவை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

இதுகுறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருந்த போதும் மாநில அரசு குறைக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்கள். நவம்பர் 2021 ல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது.

மேலும், மத்திய அரசின் வரிகுறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதாவது, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாகக் குறைந்துள்ளது.

எனவே, தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசு மீன்வளத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது.

இதனால், மத்திய அரசிற்கு வருவாய் பல இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப, மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247%), டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790%) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி வந்துள்ளது. நவம்பர் 2021 மற்றும் மே 2021 ல் சேர்த்து, பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைத்துள்ளது.

மத்திய அரசு தனது வரிகளைக் குறைத்துள்ள நிலையிலும், 2014ம் ஆண்டிலுள்ள வரிகளை ஒப்பிடும்போது, தற்போதுள்ள மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு10.42 ரூபாயும் (110%), டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342%) இன்னும் அதிகமாகவே உள்ளன.

ஆகவே, மத்திய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது. 03.11.2021 அன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால், மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், மே, 2022ல் அறிவித்துள்ள வரி குறைப்பால், மாநில அரசிற்கு மேலும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின் முடிவு மூன்று கட்டங்களில் எடுக்கப்பட்டது.

மூன்றாவது கட்டம், அதாவது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில் தான் வரி விதிப்பிற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதில் மத்திய அரசிற்கு 33 சதவீத வாக்கும், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தலா இரண்டு சதவீத வாக்கும் உள்ளது. பெரிய மாநிலமோ அல்லது சிறிய மாநிலமோ, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே.

இவ்வாறு உள்ள கட்டமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் பரிந்துரையை தடுக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ 25 மாநிலங்களின் ஒருமித்த ஆதரவு வேண்டும். அல்லது மத்திய அரசின் ஆதரவு வேண்டும்.

மேலும், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தில் முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த 56 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரிவிதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை மத்திய நிதியமைச்சரே குறிப்பிட்டுள்ளார்கள்.

தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம் மற்றும் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம். ஆனால், மத்திய அரசு வரிகளில் இருந்து நமக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டுமே. தொடர்ந்து வந்த நிதிக் குழுக்களால் தமிழ்நாட்டிற்கு நிதிப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை. உரிய பங்கு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்,மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசுக்குத் தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி, மத்திய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

Jeba Arul Robinson

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: இபிஎஸ்

EZHILARASAN D

அரைசதம் விளாசினார் சூரியகுமார்: இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்கு

Gayathri Venkatesan