தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு இடைக்கால தடை கோரிய கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கணவரின் வருமான வரிக்கணக்கு எண் வேட்பு மனுவில் குறிப்பிடாததால், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தொகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, இவ்வழக்கு பல மாதங்களாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு இந்த வழக்குப் பட்டியலிடப்பட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீண்ட காலமாக இவ்வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவ்வழக்கை இறுதி விசாரணைக்காக பட்டியலிடப்படுமாறு தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற எதிர்மனுதாரர் சந்தானகுமாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இதனால், கனிமொழியின் தேர்தல் வெற்றி எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடருகிறது.
-ம.பவித்ரா








