பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட்…

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்ட நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து பல பிஎஃப்ஐ உறுப்பினர்களை கைது செய்திருந்தது. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் SDPI அமைப்புகளின் நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துனை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.