நானிலம் கொண்டாடும் நவராத்திரி திருவிழா!

இந்தியாவில் பல மாநிலங்களிலும், இந்திய வம்சாவளியினர் வாழும் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி. அகிலாண்ட கோடி பிருமாண்ட நாயகி துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து வணங்கி, ஆசி பெறும் அற்புத…

இந்தியாவில் பல மாநிலங்களிலும், இந்திய வம்சாவளியினர் வாழும் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி. அகிலாண்ட கோடி பிருமாண்ட நாயகி துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து வணங்கி, ஆசி பெறும் அற்புத நாட்களிவை.

பெண்களுக்கான பண்டிகை. பெண் தெய்வங்களைப் போற்றித் துதிக்கும் பண்பாடாக, முப்பெரும் தேவிகளான துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வீடுகளிலும், ஆலயங்களிலும் கொலு பொம்மைகள் வைத்துக் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி.

புராண, இதிகாச, அவதாரக் காட்சிகள் மூலம் இளம் தலை முறையினர் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளைக் தெரிந்து, தெளிவடையவும், மனிதனின் படிப்படியான வளர்ச்சி பரிமாணத்தை புரிந்து கொள்ளவும், பெண் தெய்வங்களின் மகிமை, தீமையை அழித்து நல்வாழ்வினைத் தரும் வழி போன்ற புரிதலுக்கான விழாவாக நவராத்திரி திகழ்கிறது.

ஆண்களால் அழிவு இல்லை என்கிற வரத்தைப் பெற்ற அரக்கர்களை, பிரும்மா, சிவன், விஷ்ணு மற்றும் பல தேவர்களின் சக்தி ஆயுதங்கள் பெற்று, 9 நாள் போர் செய்து, வெற்றி பெற்றதையும், பேரண்டத்தை புதியதாக்கி, அதில் மனிதர்கள், பல்வேறு ஜீவராசிகள், அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு, சூரியன் முதலான அனைத்து கிரகங்களுக்கும் சக்தி ஒளி தந்து இயக்கி வைத்ததாக தேவி மகாத்யம் விவரிக்கிறது. ஆதி பராசக்தியாக, அகிலாண்ட நாயகியாக, 8 அஷ்டமா சித்திகளையும், 9 நிதிகளையும் உள்ளடக்கி, அஷ்ட புஜ தாரணியாக, வீரம், தைரியம், விவேகம் வேண்டி முதல் 3நாட்கள் மலைமகளிடம் மனித உடலின் ஆத்ம சக்கரங்களுக்கு சக்தி தர வேண்டுகிறோம்.

அடுத்த மூன்று நாள் செல்வம், உடல்நலம், வாழ்க்கை வசதிக்கு மகா லட்சுமியையும் அடுத்த 3 நாள் கல்வி, அறிவு, கலை ஞானம் தொழில் வளம் எல்லாவற்றிற்குமாக சரஸ்வதி தேவியின் அருளை வேண்டியும், 10வது நாள் வெற்றியின் அடையாளமாக விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது.

மிகவும் பழமை வாய்ந்த பண்டிகை இது. தேவர்களும், அரசர்களும் கொண்டாடிய வரலாறுகள் உண்டு. இராமர், சீதையை மீட்டது, கிருஷ்ணர் சியா மந்தி மணி அபவாதம் நீங்கப்பெற்றது, பாண்டவர் பாரதப் போரில் வென்றது என இவ்விழாவின் சிறப்புகள் மிக நீளம். அம்பாளின் பராக்கிருமம், சண்டிகையாக செய்த வீர உண்ர்வுகளை தேவி மகாத்மியம் விளக்குகிறது. தேவி பாகவதத்திலும் இதுபற்றி அறியலாமென்பர்.

சக்தியின் பெருமையை ஆதிசங்கரர் உணர்ந்த ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. அதில், சிவன், சக்தியுடன் இணைந்தே இந்த அண்ட பிரமாண்டத்தை சீரமைத்து படைக்கிறார். “சக்தி இல்லையேல், சிவம் இல்லை” எனும் பொருளை சௌந்தர்யலஹரி ஸ்தோத்ரங்களில் தேவியை வெளி ப்படுத்தினார். ராமகிருஷ்ண பரம ஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் இதே கோட்பாட்டில் இருந்ததை அறிகிறோம்.

நவராத்திரி விழா ஐந்து வகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவைகள் வசந்த நவராத்திரி- இது சித்திரை மாதத்தில் வருகிறது. ஆஷாட நவராத்திரி -ஆஷாட (ஆடி) மாதத்தில் வருவது. சரத் நவராத்திரி- அதாவது முக்கியமான நவராத்திரி. இதற்கு பின்னர் தான் தசரா வருகிறது. குளிர் காலத்தில் அக்டோபரில் வருகிறது. புஷ்ஷா நவராத்திரி இது. புஷ்ஷ சுக்ல பட்சத்தில், டிசம்பரில் அடுத்ததாக மகா நவராத்திரி ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் வரும்.

அந்தந்த நாளுக்குரிய அலங்காரங்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாள் தேவி காமாட்சி அலங்காரம், பின்னர் அடுத்தடுத்த நாட்களில் தேவி பால திரிபுர சுந்தரி, தேவி மாரியம்மன், தேவி அன்ன பூர்ணி, தேவி மஹாலக்ஷ்மி, தேவி ராஜ ராஜேஸ்வரி, லலிதா தேவி, தேவி மனோன்மணி (சிவ பூஜை அம்பாள்), தேவி சரஸ்வதி இறுதியாக மகிஷாசுர மர்த்தினி அம்பாள் அலங்காரம் என வகைப்படுத்தப்படும்.

ஒருவர் வாழ்வில், கல்வி, செல்வம், வீரம் மூன்றும் முக்கியமானது. கல்வியால் ஈட்டிய செல்வத்தை, வீரத்தால் காத்து, விவேகமுடன் வாழ வேண்டும்.

ஆக வீரத்திற்கு தேவி துர்காவை, செல்வத்திற்கு லஷ்மியை, கல்விச் செல்வதற்கு சரஸ்வதியை பூஜைகள் செய்து, மனதார வழிபட்டு அருளை வேண்டுவர்.

தேவியின் அருட்பார்வை பெற, தேவர்கள் கடுந்தவம் மேற்கொண்டு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்திகளைப் பெற அங்கங்கள் எதுவும் ஆடாது அசையாது இருக்க அந்த நொடிகள் பேரண்டமும் நிலையாய் நின்றதை அதன் நீட்சியை நாம் நினைவலைகளில் கொள்ள கொலு வைக்கும் பழக்கம் வந்தது என்பர்.

கூத்தானூர் சரஸ்வதிகோவில் விஜய தசமி விழாவும் அன்று நடக்கும் ருத்ராபிஷேகமும் புகழ் பெற்றது. வாணியம்பாடி அதிதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை நினைத்து இசை மீட்டுப் பாடி சாப நிவர்த்தி பெற்றது. தேவியின் குரல் யாழைவிட இனிமை எனும் பொருளில், வேதாரணியத்தில் வீணையில்லாத சரஸ்வதி தேவி. இவ்வாறு அனைத்தையும் தரும் தேவியை ஆயுத பூசையிலும்,கல்வி கூடங்களிலும் வழிபடுவர்.

நவராத்திரி வழிபாட்டில் நல்ல வாழ்க்கை அமையும், வெற்றியும் செல்வமும் வீடு தேடி வரும் எனும் நம்பிக்கையில் தேவிகளை தோத்திரம் செய்து குளிர்வித்து பாட்டுகள் பாடி மகிழ்வர்.

நிவேத்யங்களுடன் பூஜை செய்வர். அருகிலுள்ளோரை அழைத்து மரியாதை செய்து நல்லாசி பெறுவர். ஒருவர்க்கொருவர் மனம் விட்டு அகம் மகிழ பழகுவார். புதுப்புது உறவுகள் மலரும்.

ஒரு எண்ணம் போதும், அந்த ஒரு எண்ணத்தால் நமது மனதை நமக்கு வேண்டிய விதமாக சிந்திக்க வைக்க, மனம் பக்குவப்படும்.

லட்சியம் பெரிதாகத் தெரிவதால், தெளிவாகவும் இருப்பதால், படிகளமைப்பது, பொம்மைகளடுக்குவது அவைகளைப் பின்பு எடுத்து வைப்பது போன்ற சிரமங்கள் பெரிதாகத் தெரிவதில்லை.

அதில் இனம்புரியாத இனிமையான மன மகிழ்வும், சாந்தியும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படுகிறது என்பதே உண்மை.

புண்ணியம் தரும் கதை அம்சங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட நல்ல கருத்துக்களை அறிந்து கொள்ள, விரதங்களால் ஏற்படும் நன்மைகள் புரிய, வாழ்வின் எதார்த்தம் என்பது, பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியம் என்பதை புரிந்து கொள்ள, சகல ஐஸ்வர்யம் தரும் இந்த நவராத்திரி நாட்கள், வீட்டிலும் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில், கோவை ஈஷா மையம், மயிலை கபாலீஸ்வரர் கோயில் போன்ற இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் யானைகளின் அணிவகுப்பும், அம்மன் ஊர்வலமும் , வாண வேடிக்கைகளும் நிறைந்திருக்கும்.

மைசூரில் பிருமாண்ட விழா களைகட்டும். தேவி புராணத்தில் விழா சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் விஜயதசமி அன்றுதான், இழந்த ஆயுதங்களைப் பெற்றதாகக் கூறுவர். இவ்வாறு இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளை உணர்த்தும் இப்பண்டிகை நாட்களில் தேவிகளை மனமாற வேண்டி நலம் பெறுவோம்.

-சுப்பிரமணியன், ஆன்மீகவாதி, ஓய்வு பெற்ற ஊழியர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.