தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், வரும் 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இந்த விதிமுறைகளுக்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது.
இதற்கிடையில், புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லாத பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படியும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடந்த 5ம் தேதி மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படி மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.







