செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ; புது பெயரில் சென்னை அணி…கேப்டனாக நடிகர் ஆர்யா தேர்வு…!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடருக்காக வேல்ஸ் சென்னை கிங்ஸ் என்ற புது பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சென்னை அணியின் கேப்டனாக நடிகர் ஆர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சினிமா நடிகர்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது . இதில் இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள் விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஹைதராபாத், மதுரை, மைசூர் ஆகிய இடங்களில் இப்போட்டிகள் நடக்கின்றன. இந்த நிலையில் சென்னை அணியானது, வேல்ஸ் ஐசரி கே கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரை உரிமையாளராக கொண்டு வேல்ஸ் சென்னை கிங்ஸ் என்ற புது பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் இந்த அணிக்கு  அம்பாசிடராக நடிகை மீனாவும், ஆலோசகராக நடிகர் சரத்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணி அறிமுக விழாவில் பேசிய ஆர்யா, ”ஐபிஎல்-லில் உள்ள சென்னை அணியை விட, இந்த அணியில் ஏகப்பட்ட விஷயங்கள், ஈடு பாடு இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் உற்சாக விளையாடுவார்கள். ஆனாலும் வீரர்களை சமாளிப்பது கஷ்டம். முடிவதற்குள் முடி கொட்டிவிடும். போட்டிகளில் வீரர்கள் எமோஷனல் ஆகிறார்கள். ஜாலியாக விளையாடாமல் சீரியஸ் ஆக ஆடுவார்கள். அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆண்டு ஜெயிக்க முயற்சிப்போம். நிறைய வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய சரத்குமார், ‘‘இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 50 லட்சம் வழங்கப்படுகிறது. அதை உயர்த்திகொடுக்க வேண்டும்’ என்றார். சென்னை அணியில் நடிகர்கள் பரத், கலையரசன், சத்யா, பிருத்வி உட்பட பலர் விளையாடுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.