இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூப்லியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது.
ஜூன் 2ம் தேதி தொடங்கி 4 நாட்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ராணியைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரள்கின்றனர். அந்நாட்டில் விழாக் கோலம் பூண்டுள்ளது.
எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952 ம் ஆண்டு மகாராணியாக முடிசூடிக் கொண்டார்.
அப்போது அவருக்கு வயது 25. இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதனை கடந்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!
1947- ல் இரண்டாம் எலிசபெத், பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் வாழ்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு தனது 99 வயதில் பிலிப் காலமானார்.
இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 96 வயது ஆகிறது.







