அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றசாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்து இருந்தார். ஆனால் ரூபியோவின் கருத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயி பாகேய் கூறியுள்ளதாவது: பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதே சரியாக இருக்கும். ஆனால், இதனாலேயே ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்று யாரும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.







