ஒருங்கிணைந்த இளம் சிசுக்கள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், குரும்பபாளையம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்துப் பார்வையிட்டார். பின்னர், மதுக்கரை வட்டாரத்தில் வரும் முன் காப்போம் திட்ட முகாமை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 1260 முகாம்கள் நடத்தப்பட்டு 904500
பேர் பயன்பெற்றுள்ளனர் எனவும், இந்த ஆண்டு இதுவரை 461 முகாம்கள் நடத்தப்பட்டு
429049 பேர் பலன் அடைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், காசநோய் இல்லா தமிழகம் உருவாக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. 10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. காச நோய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த வாகனங்கள் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. காசநோய் கண்டறிதல், கண் பரிசோதனை செய்து கேட்ராக்ட் கண்டறிதல் ஆகிய இரண்டும்
இனி வரும் முன் காப்போம் முகாம்களில் மக்களுக்கு அளிக்கப்படும். இந்த இரு சிறப்பு பிரிவுகளை கோவையில் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்
மா.சுப்பிரமணியன், டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று இன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசநோயை துவக்க நிலையில் கண்டறிய முடியும். இனிமேல் தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு வரும் முன் காப்போம் திட்டத்திலும் கண்புரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். கண்புரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவது இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. தமிழகத்தில் 1700 மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகின்றது. 1090 நோய்களுக்கு 5 லட்ச ருபாய் வரை சிகிச்சை பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கோவையில் காப்பீட்டுத் திட்ட அட்டை வாங்க கூடுதலாக புதியதாக ஒரு மையம்
அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்த மாவட்ட ஆட்சியர்
நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ஒருங்கிணைந்த இளம் சிசுக்கள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீதம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகின்றனர். 5 சதவீதம் பேர் மட்டுமே தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 3 மாதங்களில் கொரொனாவால் இரு இறப்புகள் மட்டுமே இருந்தது. அதுவும் துணை நோய்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது. எந்த வகையில் அறிகுறி இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசிக்கான கால அவகாச நேரத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருவதால் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை. சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3வது தவணை தடுப்பூசி போட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். அப்பல்லோ, காவேரி போன்ற மருத்துவமனைகள் 3வது தவணை தடுப்பூசிக்கான விலையான 386.25 விலையில் சர்வீஸ் சார்ஜ் 150 ரூபாயை தள்ளுபடி செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை 50 மாணவர்கள் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கான டிசைன் ரெடி செய்யப்பட்டு வருகின்றது. அது
தயாரானதும் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும். இதற்கு 6 மாதத்திற்கு மேலாகும்.
இதுவே முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே நடந்துள்ளது. கோவைக்கும் ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதை டெல்லி செல்லும்போது வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
-ம.பவித்ரா








