திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கல் மூலம் வெறும் 2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியத்துவம் கருதி இந்த மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று காலை முதல் திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நிலத்தை வாங்கியவர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற சிபிசிஐடி மாவட்ட கண்காணிப்பாளர் (SP) சஜிதா தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிரடியாக உள்ளே நுழைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகள் உள்ளே நுழைந்தவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தின் முக்கியக் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ளே இருக்கும் பத்திரப் பதிவு அலுவலர்கள், எழுத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஒரே இடத்தில் அமர வைத்து சிபிசிஐடி குழுவினர் நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய அந்த 100 கோடி ரூபாய் நிலப் பத்திரப் பதிவு எப்படி நடைபெற்றது…? அதற்குத் துணை நின்ற அதிகாரிகள் யார்…? ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட்டன…? என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், அலுவலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் முக்கிய ஆவணக் கோப்புகளையும் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.




