காவிரி விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை…!

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ் நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க, தமிழ் நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு தமிழ் நாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றானர். மேலும் முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் மாநிலத்திஞ் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வினை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில். காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம் மேகதாது அணை அனுமதியையும் அளிக்கவில்லை திட்டத்திற்கு எவ்வித என்றும். இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் மாண்பமை உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

13.11.2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார். தலைமைச் செயலாளர் முனைவர் ७. சாய்குமார், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சட்டத்துறை செயலாளர் திரு.எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மூத்த வழக்கறிஞர் திரு. ஜி. உமாபதி. காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் திரு. ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.