சூடானில் விமானியை பூனை தாக்கியதால் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சூடானில் கார்டூம் விமான நிலையத்தில் இருந்து டர்கோ ஏர் விமானம் கடந்த புதன்கிழமை கத்தாரை நோக்கி புறப்பட்டது. கிளம்பிய 30 நிமிடத்தில் திடீரென பூனை ஒன்று விமானி அமர்ந்து இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை தாக்கத் தொடங்கியது. இதனையடுத்து, விமானத்தை மீண்டும் சூடானுக்கு திருப்பி தரையிறக்கினார் விமானி. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “விமானத்தில் பூனை எப்படி வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பூனை விமானத்தை சுத்தம் செய்யும் போது அல்லது தொழில்நுட்ப சோதனை செய்யும்போது யாரும் கவனிக்காத நேரத்தில் ஏறியிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற வினோத சம்பவம் ஒன்று இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட இருந்தபோது, ஒரு நபர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் இறக்கையில் ஏறினார். அந்த நபர் இறக்கையில் நடந்து அதன் மீது அமர்ந்திருப்பது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எடுக்கப்பட்ட வீடியோவால் கண்டறியப்பட்டது.
அந்த நபர் தனது காலணிகள் மற்றும் சாக்ஸை அகற்றிவிட்டு, ஜெட் விமானத்தின் இறக்கையில் ஏற முயன்றார். தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவரை நோக்கி சென்றபோது, அந்த நபர் பயத்தில் விமான இறக்கையில் இருந்து தரையில் விழுந்தார். அவரை லாஸ் வேகாஸ் பெருநகர காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







