குடியரசு தினத்தன்று வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றன. இந்தபோரட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்ட பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
முன்னதாக குடியரசு தினத்தன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக, இதுவரை 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள நடிகர் தீப் சித்து உள்ளிட்ட 4 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.







