2000 ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் மாற்ற அனுமதிக்க கூடாது எனக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக சில தினங்களுக்கு
முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும், இதற்கு அடையாள அட்டை எதுவும் வழங்க தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில் பாஜக வழக்கறிஞரான அஸ்வினி உபாத்தியாய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பெரும்பாலான குடிமக்களிடம் ஆதார் அடையாள அட்டை உள்ளது. அதேபோல வங்கிக் கணக்கும் உள்ளது. அப்படி இருக்கும்போது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என தெரிவிப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது உரிய அடையாள அட்டை கொடுத்து மாற்றும் வகையில் புதிய அறிவிப்பை கொடுத்தால் தான் இதனால் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முடியும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு இன்று அவசர வழக்காக டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு நிர்வாக நடவடிக்கையே தவிர பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அல்ல என கூறினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த, வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.







