ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் சிலர் ‘சுத்திகரிப்பு யாகம்’ நடத்தியதாகக் கூறப்பட்டது. இது அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததுடன், அந்த “சுத்திகரிப்பு” நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்கள் மீது SC/ST சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஒரு மதச் சடங்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிய சாயம் பூசினார் என்று ஹல்த்வானியில் ஜவஹர் நகரைச் சேர்ந்தவரும், ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் உறுப்பினருமான அமித் குமார், ஹல்த்வானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் அளித்த புகாரில், “சடங்கு மற்றும் தூய்மைப் பணி இயக்கத்தின்” போது தான் உடனிருந்ததாகவும், ஆகஸ்ட் 29 அன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காந்தி தெரிவித்த கருத்துகள் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, ராகுல் காந்தி மீது, குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.