நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில்  நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் தனது பேச்சுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் தெரிவித்தார். இது குறித்து கடந்த மே 3 ஆம் தேதி அவர் தனது எக்ஸ் பதிவில்,  “நமது நாட்டின் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை, அவர்களை மிகவும் மதிக்கிறேன். நமது ஒற்றுமையை பற்றித்தான் பேசினேன். இந்தியா எப்படி ஒன்றாக இருக்கிறதோ நம் மக்கள் அப்படியே இருக்கிறோம்.

நாமும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதைத்தான் பேசினேன். நான் எப்படி இந்தியா மக்களை பாகுபாடு காண்பித்து இழிவுபடுத்தி பேசுவேன். அவர்களும் என்  குடும்பம் போலத்தான். நான் பயன்படுத்திய பழங்குடி என்ற வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித சமூகத்தின் மோதலை குறிக்கிறது. ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா மீது அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.