பெங்களூரூவில் சொமாட்டோ ஊழியரை தாக்கியதாக பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த ஹிதேஷா சந்திரனே அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவு வருவதற்கு தாமதமாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆர்டர் செய்த உணவை ரத்து செய்யுமாறு சொமாட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த சமயத்தில் அங்கு உணவை எடுத்து வந்த சொமாட்டோ ஊழியர் காமராஜ், தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தன்னைத் தாக்கியதாகவும் ரத்தம் சொட்ட சொட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இதன் தொடர்ச்சியாக சொமாட்டோ நிறுவனம் காமராஜை பனியிடை நீக்கம் செய்தது. பெங்களூரூ போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த நிலையில், அதன்பிறகு காமராஜ் சொந்த ஜாமீனில் வெளியே வந்தார்.
காமராஜ் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்தபோதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. உணவு எடுத்து வந்த தன்னை ஹிதேஷா தன்னைச் செருப்பால் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை தாக்க முற்பட்டபோதுதான் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் குற்ப்பிட்டார்.
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு ஹிதேஷா அளித்த பேட்டியில், “நான் என்னை தற்காத்துக் கொள்ளவே அவரை தாக்கினேன்” என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஹிட்டேஷாவிற்கும் காமராஜிற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது.இந்நிலையில் காமராஜ் அளித்த புகாரின் பேரில் ஹிதேஷாவுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.