வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கைக் கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-97-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001-ஆம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் பதில் அளித்திருந்தார். அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் எனத் தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியா 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயைச் செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்ச ரூபாய்க் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
நிலுவையிலிருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில், வருமான வரித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான மதிப்புடைய வழக்குகளைக் கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளைத் திரும்பப்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.