தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிலானி என்பவர் தேனி எம்.பி, எம்எல்ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2021 சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட்டார். அதேபோல், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார்.
இருவரும் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித் தகுதிகள் குறித்த தகவல்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மிலானி கோரியிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மிலானியின் புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால் ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத்துக்கு எதிராக மிலானி தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.




