இலங்கையை வீழ்த்தி 222 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடியது. இந்த இரு…

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக 201 ரன்கள் எடுத்து தொடக்க ஆட்டக்காரர் ஷஃபீக் ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடர்ந்து அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்து அஹா சல்மான் களத்தில் இருந்தார். பாகிஸ்தானை காட்டிலும் அதிக அளவில் ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் மொத்த விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நோமன் அலி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.