இபிஎஸ்ஸுக்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர்மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐ விசாரணை கோருகிறாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆர்.எஸ்.பாரதி தரப்பு, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த சிபிஐ விசாரணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். வழக்கை விசாரித்த பின்னர் இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.