இந்தியா இளம் தொழில்முனைவோர்களின் நாடு எனவும், தாராளமயமாக்கல் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை ஆதரிப்பது ஸ்டார்ட்-அப்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் எனவும் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
”வருங்கால உலகை இயக்கும், தீர்மானிக்கும் முக்கிய காரணிகளான மின்னாற்றல், வாகனங்கள், சூரியசக்தி, காற்றாலை ஆற்றல் போன்ற தொழில் நுட்பங்களுக்கு கனிமவளம் என்பது தலையாயத் தேவை. இதன் செயல்பாட்டிற்கு அதிக அளவு லித்தியம், கோபால்ட், அரியவகை உலோகங்கள் தாமிரம் மற்றும் பிற தாது தனிமங்களின் தேவை இன்றியமையாதது.
இவற்றில் சில கனிமங்களை இந்தியா 100 சதவீதமும் தேவைக்கேற்ப சில கனிமங்களை 50 சதவீதமும் இறக்குமதி செய்து வருகிறது. பொருளாதார முன்னேற்றம் அடைய முயலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது பெரும் ஆபத்து ஆகும்.
அரியவகை தாதுக்கள் மற்றும் உலோக உற்பத்தியில் சீனா உலக அரங்கில் முன்னணியில் உள்ளது. எண்ணெய்யைத் தவிர மற்ற கனிமங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் தராத நாடுகளின் முதலீட்டை ஈர்க்கவும், எதிர்கால கனிம தேவைகளை ஈடு செய்யவும் கனிம உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கவும் மிகவும் தாராளமான கொள்கைகளை சீனா வெளியிட்டுள்ளது.
சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளை விட இந்தியா சிறந்த புவியியலை, பூலோக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் சீனா மற்றும் சவுதி அரேபியா தாராளமயமாக்கப்பட்ட கனிம ஆய்வு கொள்கைகளை கொண்டுள்ளது. இளம் தொழில்முனைவோர் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவுவதும், அவர்களின் கண்டுபிடிப்புகளை கனிம சுரங்க நிறுவனங்களுக்கு விற்க அனுமதிப்பதும் முக்கியம். இந்த பெரும் நிறுவனங்கள் இளம் தொழில் முனைவோரின் கண்டுபிடிப்புகளை உலகமயமாக்குவார்கள்.
ஸ்டார்ட்-அப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பத்தின் துவக்கம் என்பது தங்களின் கண்டுப்பிடிப்புகளை உலக அளவில் பெயர் பெற்ற பெரிய நிறுவனங்களுக்கு விற்று, அந்த கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு யுக்தி. சுரங்கத் தொழிலில் உலக அளவில் கடைபிடிக்கப்படும் நடைமுறை இது. இதன் மூலம் நமது புவியியல் முழுமையாக ஆராயப்பட்டு புதிய கண்டுப்பிடிப்புகள் கண்டறியப்பட்டு உலக அளவில் மற்ற நாடுகளை விட முன்னணியில் இருக்க முடியும்.
இந்தியா இளம் தொழில் முனைவோர்களின் நாடு. அவர்கள் பறக்க சிறகுகள் தேவை. தாராளமயமாக்கல் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை ஆதரிப்பது ஸ்டார்ட்-அப்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். இதன் மூலம் உலகின் முதல் மூன்று பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்க உதவும்.
காலம் பொன் போன்றது, அதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அந்த பதிவில் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.







