அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தி இருந்தது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்
இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது
அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு வழக்குகள் மீதான தீர்ப்பு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்குகளில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.







