மதுரையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

மதுரை வாடிப்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண்பதற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் மாருதி ஆல்டோ காரில் சென்றுள்ளனர். சுவாமி தரிசனம் மற்றும் விழா முடிந்த பின் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் நாமக்கல் நோக்கி காரில் திரும்பியுள்ளனர்.

​அப்போது, மதுரை – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே நகர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, எந்தவித முன்னறிவிப்புமின்றி சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் எதிர்பாராத விதமாகப் பலமாக மோதியுள்ளது.

​இந்தக் கோர விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த நாமக்கல்லைச் சேர்ந்த சண்முகம் மற்றும் பொன்னுச்சாமி ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

​இதையடுத்து, காருக்குள் படுகாயங்களுடன் சிக்கித் தவித்த யுவராஜ், சரவணன், தேவராஜ் ஆகிய மூவரையும் அப்பகுதி பொதுமக்களும், ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினரும் இணைந்து மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் யுவராஜ் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​மேலும், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சண்முகம் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரின் உடல்களை மீட்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி உடல்களை மீட்டனர்.

​விபத்து குறித்துத் தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.