யார் இந்த கேப்டன் மில்லர்?

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை இது தானா ? வன்முறை, பழிக்குப்பழி போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக இயல்பாக எடுக்கப்படுபவை. 100 படங்களை…

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை இது தானா ?

வன்முறை, பழிக்குப்பழி போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக இயல்பாக எடுக்கப்படுபவை. 100 படங்களை எடுத்துக்கொண்டால் அதில் 90 சதவீதம் இவற்றை மையமாக வைத்தே வெளியாகி இருக்கும். ஆனால் ரத்தம் தெரிக்க தெரிக்க பழி வாங்கும் எண்ணத்தோடு மட்டுமே வெளியாகும் படங்கள் மிக சொற்பம். ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்களில் இப்படியான பல படங்கள் வெளியாகி இருந்தாலும் தமிழில் அப்படி வெளியான திரைப்படங்கள் மிக குறைவு. அப்படி வெளியான படங்களில் முக்கியமானவை ராக்கி, மற்றும் சாணிக்காயிதம்.

இந்த இரண்டு திரைப்படங்களும் வன்முறையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். வன்முறை படங்கள் என்பது வேறு இது போன்ற படங்கள் என்பது வேறு. மையப்புள்ளி ஒன்றாக இருந்தாலும் காட்சிப்படுத்தும் விதம் முற்றிலும் வேறாகவே இருந்தது. சித்ரவதை செய்து கொல்லப்படும் காட்சிகள், தமிழில் இலைமறைவு காயாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் வெளியான இது மாதிரியான படங்களில் அவை அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கும்.

இந்த இரண்டு படங்களையும் இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதியை சத்ய ஜோதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் யார் இந்த கேப்டன் மில்லர் என்று ரசிகர்கள் இணையத்தில் தேட தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் முதல் உயிரிழப்புப்படை போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்கிற கேப்டன் மில்லர் கதையை தான் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் திரைப்படம் இலங்கைப் போரில் உயிர்பிழைத்து தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பத்தின் கதையை மையமாக கொண்ட கேங்க்ஸ்டர் படமாக ராக்கி உருவாகி இருக்கும். அதே போல கேப்டன் மில்லர் கதையும் இலங்கையை மையமாக கொண்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் அதை உறுதி செய்வதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தாவி குதிக்கும் பைக்கில் பெரிய கத்தியுடன் கேங்க்ஸ்டர்கள் வளம் வருவதை போல வெளியாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.