இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்தப்படும் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் தொற்று பாதிப்பை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் உருவாக்கப்படும் விமர்சனங்களையும், டூல்கிட்களையும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் தவிர்க்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் குறித்து உருவாக்கப்படும் டூல்கிட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்ந்து இந்த மனுவை விசாரித்தது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இம்மாதிரியான டூல்கிட்கள் தடை செய்யப்பட்டுள்ளது எனவே இந்தியாவிலும் இம்மாதியாக தடை விதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
விசாரணையில், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இது போன்று தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.







